பா.ம.க.வினர் சாலை மறியல்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை;
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
உள்இடதுக்கீடு ரத்து
வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு அரசாணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. இதை கண்டித்து மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே பா.ம.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
கைது
இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதைப்போல குத்தாலத்தில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.