தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்த செய்திகள் வருமாறு:-
தொற்றுநோய் பரவும் அபாயம்
திருவாரூர் மாவட்டம், கேக்கரையை அடுத்த ராமயவரம் என்ற பகுதியில் 15 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மழைக்காலம் என்பதால் வீட்டின் அருகில் மழை நீர் தேங்கி விடுகிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். வடிகால் வசதி இல்லாமல் மழை நீர் தேங்கி விடுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடயாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமயவரம், பொதுமக்கள்.
சாலை வசதி வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்திற்குட்ட பகுதியில் உள்ளது மடப்புரம் கிராமம்.இந்த கிராமத்தில் மாஞ்சோலை சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.. இதனால் மழை தண்ணீர் மேடு, பள்ளங்களில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர வேண்டும்.
-அசோக்ராஜ்,மடப்புரம்.
பஸ்நிலையத்தை ஆக்கிரமித்த தரைக்கடைகள்
திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் நடந்து செல்ல முடியாதபடி தரை கடைகள் அதிக அளவில் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் தற்போது மழைகாலமாக உள்ளதால் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் பயணிகள் அவதியடைகின்றனர்.எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தை ஆக்கிரமித்துள்ள தரைகடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
-வி.பாலமுருகன் திருவாரூர்.