மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்

மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்

Update: 2021-11-01 16:26 GMT
பொள்ளாச்சி

ஆனைமலை அருகே பெத்தநாயக்கனூர் பள்ளியில் மாணவர் களுக்கு பூங்கொத்து கொடுத்து உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வரவேற்றார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இனிப்பு வழங்கினார். 

உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள்  திறக்கப்பட்டன. இதனால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு சென்றனர். கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் சினிமா படப்பிடிப்புக்காக உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார். 

இந்தநிலையில் அவர் ஆனைமலை அருகே உள்ள பெத்த நாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு  திடீரென்று சென்றார். அவருடன் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உடன் சென்றார். 

பூக்கள் கொடுத்து வரவேற்றார் 

அவர்களை பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர். பின்னர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மாணவ-மாணவிகளுக்கு பூக்கள், இனிப்பு கொடுத்து வரவேற்றார். அதுபோன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். 

இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், மாணவர்களிடம் எத்தனை நாட்கள் கழித்து பள்ளிக்கு வருகிறீர்கள்?, பள்ளிக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளதா? யாரும் பள்ளிக்கு செல்ல வற்புறுத்தினார்களா? என்று கேட்டார்.

மாணவர்கள் பதில் 

அதற்கு மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியாக பதில் அளித்தனர். பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளை கவனமாக, பாதுகாப் பாக பார்த்து கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். .

இதை தொடர்ந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மகிழ்ச்சியான சூழ்நிலை 

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியவாறு மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ, அதை விட தற்போதைய காலக்கட்டத்தில் உடல் நலத்திற்கு முக்கியம் கொடுத்து கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப் படும். 

பள்ளிக்கு வருகின்ற குழந்தைகளுக்கு பூங்கொடுத்து, இனிப்புகள் வழங்கி ஒரு மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாக்கப் பட்டு உள்ளது.

குழந்தைகளின் மனநிலையை அறிந்து 2 வாரங்களுக்கு பிறகு தான் பாடம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நீட் தேர்வு தமிழகத்தில் வராமல் இருப்பதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். 

சட்ட போராட்டம் 

முதல்-அமைச்சரை பொறுத்த வரை தமிழகத்தில் சட்டப் போராட்டம் நடத்தி நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். மாணவர்கள் தற்கொலை செய்யும் எண்ணத்தை கைவிட வேண்டும். 

12-ம் வகுப்பு முடிந்ததும் பள்ளி, கல்வித்துறை வேலை முடிந்து விட்டது என்று இல்லாமல் மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும், அவர்கள் மேல்படிப்பில் சேருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க மாவட்ட கலெக்டர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்