கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலியாகினர்
கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலியாகினர்
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலியானார்கள்.
கணவன்-மனைவி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அன்னைதெரசாநகர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 63). மின் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சுப்புலட்சுமி (62).
இவர்களின் வீட்டின் முன்பகுதியில் இரும்பு குழாய், இரும்பு கூரை அமைக்கப்பட்டு இருந்தது. இதில் இரும்பு குழாயில் துணிகளை காயப்போடுவது வழக்கம். நேற்று கோவில்பட்டி பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் வீட்டின் முன்பு காயப்போட்டு இருந்த துணிகளை எடுப்பதற்காக சுப்புலட்சுமி சென்றார்.
மின்சாரம் தாக்கி பலி
அப்போது, அதில் மின்கசிவு ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. துணியை எடுத்தபோது, சுப்புலட்சுமி மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் அலறினார். மனைவியின் சத்தம் கேட்டு அங்கு சண்முகராஜ் ஓடி வந்து காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சண்முகராஜ், சுப்புலட்சுமி ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து வெளியில் இருந்து சண்முகராஜ் மகன் கனகராஜ் வீட்டிற்கு வந்தார். அங்கு தனது தந்தை-தாய் ஆகியோர் உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக கோவில்பட்டி மேற்கு போலீசுக்கும், மின்வாரியத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மின்வாரிய ஊழியர்கள் வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.
போலீசார் விசாரணை
பின்னர் 2 பேர் உடல்களையும் போலீசார் மீட்பு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த தம்பதிக்கு கனகராஜ் (41) என்ற மகனும், வீரலட்சுமி (38) என்ற மகளும் உள்ளனர்