திண்டுக்கல்லில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
தீபாவளி பண்டிகைையொட்டி, திண்டுக்கல்லில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
திண்டுக்கல்:
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பட்டாசுகள், புத்தாடைகள் மற்றும் பலகார வகைகளை வாங்குவதற்காக கடைவீதிகளில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதேபோல் தீபாவளி தினத்தன்று இறைச்சி பிரியர்களும் தங்களுக்கு பிடித்த இறைச்சிகளை சமைத்து சாப்பிடுவார்கள். இதன் காரணமாக தீபாவளியையொட்டி ஆடு, கோழிகள் விற்பனை படுஜோராக நடக்கும்.
அந்த வகையில் திண்டுக்கல் நாகல்நகர் ஆட்டுச்சந்தையில் நேற்று ஆடு, கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
திண்டுக்கல்லை அடுத்த எரியோடு, நத்தம், சாணார்பட்டி, சின்னாளபட்டி, செம்பட்டி, வாடிப்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் இந்த சந்தைக்கு வந்து தாங்கள் வளர்த்த ஆடு, கோழிகளை விற்பனை செய்தனர். இதில் ஆடுகளை பொறுத்தவரை ஒரு ஆடு ரூ.2 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை (சண்டை கிடா உள்பட) விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து சந்தை நிர்வாகிகளிடம் கேட்ட போது குறைந்த எண்ணிக்கையிலேயே சந்தைக்கு ஆடுகள் கொண்டுவரப்பட்டதால் சிறிது நேரத்திலேயே அனைத்து ஆடுகளும் விற்பனை ஆனது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.1 கோடி வரை வருமானம் கிடைத்தது என்றனர்.
--------