கோவை
கோவையை அடுத்த வடவள்ளி சக்திநகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 50). தங்க நகை வியாபாரி.
இவர், சத்தியமங்கலத்தில் இருந்து 2 கிலோ தங்கம் மற்றும் ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்துடன் பஸ்சில் கோவை வந்தார்.
பின்னர் அவர், காந்திபுரத்தில் இருந்து தொண்டாமுத்தூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது, அவரை 2 பேர் மறித்து கத்தியை காட்டி மிரட்டி சரமாரியாக தாக்கி 2 கிலோ தங்கம் மற்றும் ரூ.7½ லட்சத்தை பறித்து விட்டு தப்பிச்சென்றனர்.
நகை பறித்த கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் தங்கநகை வியாபாரி சண்முகத்தை மர்ம நபர்கள் தாக்கி நகை மற்றும் பணத்தை பறிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
அதில் நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை மறித்த 2 பேர் சண்முகத் தை சரமாரியாக முகத்தில் குத்துகின்றனர்.
அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததும் 2 கிலோ நகை, ரூ.7½ லட்சம் வைத்திருந்த கைப்பையை பறித்து விட்டு தப்பி செல்கின்றனர்.
இந்த சம்பவத்தை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிலர் பார்த்து விட்டு நிற்காமல் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
இதையடுத்து வியாபாரியை தாக்கி நகை, பணம் பறிக்கும் காட்சியில் பதிவான மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தனிப்படை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.