பள்ளிகளுக்கு ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள்
நீலகிரி மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. அங்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர். அவர்களை பாடல் பாடி, நடனம் ஆடி ஆசிரியர்கள் உற்சாகப்படுத்தினர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. அங்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர். அவர்களை பாடல் பாடி, நடனம் ஆடி ஆசிரியர்கள் உற்சாகப்படுத்தினர்.
பள்ளிகள் திறப்பு
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது தொற்று குறைந்ததை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியாருக்கு சொந்தமான தொடக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நேற்று முதல் தொடங்கியது.
சுமார் 1½ ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் வரவேற்றனர். ஊட்டி நகராட்சி ஆர்.கே.புரம் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பிரமிளா மற்றும் ஆசிரியைகள் மாணவ-மாணவிகளுக்கு பூங்கொத்து, இனிப்பு வழங்கி வரவேற்றனர். ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மேள-தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
கதைகள் கூறி மகிழ்வித்தனர்
முதல் நாள் என்பதால் மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் கற்பிக்கப்படவில்லை. மாறாக புத்துணர்வு அளிக்கும் வகையில் ஆசிரியர்கள் பாடல்கள் பாடியும், கதைகள் கூறியும், நடனமாடியும் மகிழ்வித்தனர். இதன் மூலம் குழந்தைகள் உற்சாகம் அடைந்தனர்.
முன்னதாக மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டதுடன், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும் முககவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர். சக மாணவ-மாணவிகள் கொண்டு வரும் உணவுகள், தின்பண்டங்கள், தண்ணீரை பகிர்ந்து பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
பாதுகாப்பு வழிமுறைகள்
ஊட்டி அருகே கோக்கலாடா அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்ததால் கடந்த 2017-ம் ஆண்டு மூடப்பட்டது. அதன் பின்னர் பள்ளியை மேம்படுத்தவும், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 42 மாணவர்களுடன் பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.
நீலகிரியில் தொடக்க, நடுநிலை உயர்நிலை என 700 பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். ஆசிரியர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.