பள்ளி முதல்வரை கண்டித்து ஆசிரியர்கள் திடீர் போராட்டம்
ராஜினாமா கடிதம் கேட்பதாக தனியார் பள்ளி முதல்வரை கண்டித்து ஆசிரியர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
கோத்தகிரி
ராஜினாமா கடிதம் கேட்பதாக தனியார் பள்ளி முதல்வரை கண்டித்து ஆசிரியர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
தனியார் பள்ளி
கோத்தகிரி கடைவீதி அருகே ஒரு தனியார் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 8 ஆசிரியர்களை முதல்வர் தொடர்பு கொண்டு ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு, ரூ.8 ஆயிரம் சம்பளத்தில் மீண்டும் வேலையில் சேர்ந்து கொள்ளுமாறு தெரிவித்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர்கள், முதல்வரை சந்தித்து கேட்டபோது, தரக்குறைவாக பேசி வெளியே அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.
நேற்று பள்ளி திறக்கப்பட்டு மாணவர்கள் வருகை தந்தனர். அப்போது ராஜினாமா கடிதம் கேட்கப்பட்டவர்களில் 5 ஆசிரியர்கள் காலை 8.30 மணியளவில் பள்ளிக்கு வந்தனர். ஆனால் அவர்கள் வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மன ரீதியாக பாதிப்பு
இதனால் முதல்வரை கண்டித்து கொட்டும் மழையிலும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறும்போது, எங்களை ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு குறைந்த சம்பளத்தில் மீண்டும் வேலையில் சேர கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். இதை கைவிடாவிட்டால் குடும்பத்துடன் பள்ளி முன்பு அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், ஆசிரியர்கள் யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை. அவர்களது கற்பித்தல் தகுதியை மேம்படுத்தி நிரூபிக்க 6 மாத கால அவகாசம் வழங்கி தற்போதைய சம்பளத்தையே வழங்க நடவடிக்கை எடுத்து உள்ளோம் என்றனர்.