கூடலூர் வன அலுவலகம் முன்பு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
விநாயகன் யானையை பிடிக்கக்கோரி கூடலூர் வன அலுவலகம் முன்பு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
கூடலூர்
விநாயகன் யானையை பிடிக்கக்கோரி கூடலூர் வன அலுவலகம் முன்பு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத போராட்டம்
கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் விநாயகன் என்ற காட்டுயானை தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இதை தடுக்க கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் விநாயகன் யானை ஊருக்குள் வந்து வீடுகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அதனை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விநாயகன் யானையை பிடிக்கக்கோரியும், அதற்கு நடவடிக்கை எடுக்காத வனத்துறையினரை கண்டித்தும் ஸ்ரீமதுரை ஊராட்சியை சேர்ந்த தேவசியா தலைமையில் பொதுமக்கள் கூடலூர் வன அலுவலகம் முன்பு நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
போராட்டத்தில் ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் ரெஜி மேத்யூ உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். இதை அறிந்த வனத்துறையினர் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பலமுறை விநாயகன் யானை ஊருக்குள் வராமல் தடுப்பதாக உறுதி அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதனை பிடிக்கும் வரை போராட்டம் நடைபெறும் என்று அவர்கள் கூறினர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறும்போது, விநாயகன் யானையை பிடிக்கும் வரை ஸ்ரீமதுரை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் சுழற்சி முறையில் தினமும் கூடலூர் வன அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றனர்.