சுகாதார ஆய்வாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
சுகாதார ஆய்வாளர்கள் உண்ணாவிரத போராட்டம்;
ஊட்டி
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு தொற்று நோய்களில் இருந்து தமிழக மக்களை காத்திட உருவாக்கப்பட்ட 1002 தனிப்பட்ட நிலை-1 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் பொது சுகாதாரத்துறையில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் சண்முகராஜன் கலந்துகொண்டு பேசினார். போராட்டத்தில் 1002 சுகாதார ஆய்வாளர்கள் நிலை-1 பணியிடங்களுக்கு அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அரசின் கவனத்தை ஈர்க்க காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடந்தது.
இதில் நீலகிரியில் பணிபுரிந்து வரும் சுகாதார ஆய்வாளர்கள் 40 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதால், கொரோனா பாதித்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச்செல்வது, சிகிச்சை நிலைமை அறிதல் மற்றும் பிற அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் உதயகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.