5 பேர் கைது
கொடைரோடு சுங்க சாவடியில் தகராறு செய்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் முத்தையா உள்பட 9 பேர் ஒரு காரில், கடந்த 20-ந்தேதி திண்டுக்கல் நோக்கி வந்தனர். அப்போது மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் உள்ள கொடைரோடு சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவது குறித்து அங்கிருந்த ஊழியர்களுக்கும், காரில் வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் காரில் வந்தவர்கள் இரும்பு தடுப்புகளை சேதப்படுத்தியதோடு, சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் சுங்கச்சாவடி மேலாளர் ராமநாதன் (வயது 37) புகார் செய்தார். அதன்பேரில் முத்தையா உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின் பேரில், நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சண்முக லட்சுமி, குரு நடராஜ் மற்றும் தனிப்படையினர் அவர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய வத்தலக்குண்டுவை சேர்ந்த ராஜா (40), லிங்கேஸ்வரன் (28), ஆறுமுகம் (45), விருவீட்டை சேர்ந்த சிவன்குமார் (23), மாயி (24) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முத்தையா உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.