மாணவி இறந்த நிலையில் உடல் மீட்பு

பொங்கலூர் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி காணாமல் போன பள்ளி மாணவியின் உடல் மீட்கப்பட்டது.

Update: 2021-11-01 12:08 GMT
பொங்கலூர்
பொங்கலூர் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி காணாமல் போன பள்ளி மாணவியின் உடல் மீட்கப்பட்டது. 
மாணவி
பொங்கலூர் அருகே உள்ள வலையபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகள் சகுந்தலா தேவி 14). இவர் அங்குள்ள பள்ளியில்  8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த  30-ந் தேவி சகுந்தலா தேவி மற்றும் அதே ஊரை சேர்ந்த 3 பேர் ஊரின் அருகே உள்ள பி.ஏ.பி வாய்க்காலில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அனைவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்படுவதை  அந்த வழியாக வந்த வேன் டிரைவர் சொக்கநாதன் என்பவர் அவர்களை காப்பாற்ற தண்ணீரில் குதித்தார். இதில் மூன்று பேரை பிடித்து வாய்க்காலில் தத்தளித்து கொண்டு இருந்தார். 
அப்போது அந்த பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சுதா என்பவர் தனது சேலையை வீசி அவர்களை  காப்பாற்றினர். ஆனால் சகுந்தலாதேவி மட்டும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பல்லடம் தீயணைப்பு துறையினருடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அன்று மாலை முழுவதும் தேடியும் சகுந்தலா தேவியை கண்டு பிடிக்க முடியவில்லை.  நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை தீவிர தேடுதல் பணி நடைபெற்றது. ஆனாலும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. 
உடல் மீட்பு
இதுகுறித்து  செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக அவர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு தகவல் தெரிவித்து மாணவியை கண்டுபிடிக்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர்  மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டனர். தேடுதல் பிணியை  கலெக்டர் டாக்டர் வினீத் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் ஆகியோர் நேரடியாக வந்து  ஆய்வு மேற்கொண்டனர். பல்லடம் சட்டமன்ற தொகுதி எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.,  தேடுதல் பணியை பார்வையிட்டார். 
 இந்தநிலையில் நேற்று மதியம்  2 மணி அளவில் பொங்கலூரை அடுத்த ராமம்பாளையம் அருகே செல்லும் பி.ஏ.பி. வாய்க்கால் பாலத்தில்  மாணவி சகுந்தலாதேவியின் உடல் மிதந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக தீயணைப்பு துறையினர் உள்ளே இறங்கி அவரது உடலை கயிறு கட்டி மீட்டனர். இந்த தகவல் அவரது ஊரான வலையபாளையம் பொதுமக்களுக்கு எட்டியது. அங்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. 

-

மேலும் செய்திகள்