திடீர் வேலை நிறுத்தம்
உடுமலையில் அரசு போக்குவரத்துக்கழக தி.மு.க.தொழிற்சங்க நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து அரசு பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
உடுமல
உடுமலையில் அரசு போக்குவரத்துக்கழக தி.மு.க.தொழிற்சங்க நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து அரசு பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.
அரசு போக்குவரத்து கழகம்
தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் உடுமலை கிளையில் எல்.பி.எப். தி.மு.க தொழிற்சங்கத்தில் தலைவராக இருப்பவர் ராஜா இவரிடம் உடுமலை கிளை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வளாகத்தில், அதே தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் டிரைவர்கள் சுப்பிரமணி, சசி குமார், ஆதம்ஷா, முருகன், சத்தியசீலன் உள்பட 6 பேர் நேற்று முன்தினம் இரவு தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. அபோது அங்கு வந்து தட்டிக்கேட்ட பஸ் டிரைவர் ரமேஷ்என்பவரையும் தாக்கியதாகக்கூறப்படுகிறது.இதில் தாக்கப்பட்ட தொழிற்சங்க தலைவர் ராஜா கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வேலை நிறுத்தம்
இந்த தாக்குதல் சம்பவத்தைக்கண்டித்தும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் உடுமலை கிளை தமிழ் நாடு அரசுபோக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் எல்.பி.எப். தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் நேற்று காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் திருப்பூரில் இருந்து அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் கணபதி உடுமலைக்கு விரைந்து வந்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, தொழிற்சங்க நிர்வாகியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து காலை 8.15-க்குப்பிறகு அரசு பஸ்கள் ஓடத்தொடங்கின.
அரசுபஸ்கள் ஓடாமலிருந்த நேரத்தில் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.இந்த சம்பவம் குறித்து டிரைவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் உடுமலை போலீசார், சுப்பிரமணி, சசிகுமார் உள்ளிட்ட 6 டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தனியார் பஸ்கள் ஓடின
உடுமலையில், உடுமலை கிளையில் பணியாற்றும்அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படாமலிருந்த நேரத்தில் வெளியூர்களில் இருந்து உடுமலை வழியாக மற்ற ஊர்களுக்கு வந்து செல்லும் பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் ஓடின.
---
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தைச்சேர்ந்த அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் டெப்போ வளாகத்தில் திரண்டு நின்றிருந்தபோது எடுத்தபடம்