முதல் 8ம் வகுப்பு வரை 1,882 பள்ளிகள் திறப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 1,882 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து மாணவமாணவிகள் வரவேற்கப்பட்டனர்.

Update: 2021-11-01 11:42 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 1,882 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து மாணவ-மாணவிகள் வரவேற்கப்பட்டனர். 
1,882 பள்ளிகள் திறப்பு 
கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதன் பின்னர் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நடுநிலைப்பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 1,882 பள்ளிகள் திறக்கப்பட்டன. காலையில் இருந்தே மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்தனர். திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 1ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்தனர். 
இனிப்பு பூங்கொத்து 
முன்னதாக பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்புகள், கடலை மிட்டாய்கள் மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும், பேண்டு வாத்தியம் முழங்கவும் மாணவிகள் வரவேற்கப்பட்டு, வகுப்பறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதுபோல் இந்த மாணவிகளுக்கு எழுதுபொருட்களான பென்சில், பேனா, பலூன்கள் போன்றவை பரிசளிக்கப்பட்டன. இதனை மாணவிகள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். இதுபோல் மாநகராட்சி பகுதிகளில் தென்னம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியிலும் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டும், பரிசுகள் கொடுத்தும் வரவேற்கப்பட்டனர். 
முதல் 15 நாட்களுக்கு இந்த மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் எடுக்காமல் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் கிராமப்புற விளையாட்டுகள் மற்றும் பாடல், நடனம் ஆகியவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன. மாணவ-மாணவிகள் சுழற்சி முறையில் வகுப்புகளுக்கு வரவழைக்கப்பட்டனர். இதுபோல் பள்ளிகளில் சமூக இடைவெளியை பின்பற்றியும், முககவசம் அணிந்தபடியும் இருந்தனர். 


மேலும் செய்திகள்