திருத்தணி ஒன்றிய குழு பெண் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
திருத்தணி ஒன்றிய குழு பெண் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான கூட்டம் இந்த மாதம் 8-ந்தேதி நடத்தப்படும் என்று திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா தெரிவித்தார்.;
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்தில் மொத்தம் 12 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தங்கதனம் என்பவர் ஒன்றிய குழு தலைவராகவும், ரவி என்பவர் துணை தலைவராகவும் பதவி வகித்து வருகின்றனர். கடந்த மாதம் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 9 கவுன்சிலர்கள் ஒன்றிய குழு தலைவர் தங்கதனம் செயல்பாடுகள் சரியில்லை என்று அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமென்று திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யாவிடம் மனு அளித்தனர்.
மேலும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இந்தநிலையில் திருத்தணி ஊராட்சி ஒன்றிய குழு பெண் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான கூட்டம் இந்த மாதம் 8-ந்தேதி நடத்தப்படும் என்று திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா தெரிவித்தார். இந்த ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் குறித்து ஊராட்சி ஒன்றிய குழுவின் தலைவி மற்றும் துணைத்தலைவர், அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஓ. சத்யா தெரிவித்தார்.