தாம்பரம், பெருங்களத்தூரில் அடுத்தடுத்து 2 கார்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பகுதியில் அடுத்தடுத்து 2 கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கார் தீப்பிடித்து எரிந்தது
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் கார் வந்து கொண்டிருந்தது. வேளச்சேரி சாலையில் இருந்து தாம்பரம் மேம்பாலத்தில் வந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் விஷ்ணு, காரை மேம்பாலத்தில் ஓரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். காரில் இருந்த தனியார் நிறுவன ஊழியர்களும் அலறி அடித்து கீழே இறங்கி விட்டனர். சிறிதுநேரத்தில் கார் கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. தீ விபத்து பற்றிய தகவல் அறிந்து வந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
மற்றொரு சம்பவம்
இதேபோல பெருங்களத்தூர் பஸ் நிலையம் அருகே வண்டலூரை சேர்ந்த பாலாஜி என்பவர் ஓட்டிச்சென்ற காரின் முன்பகுதியில் திடீரென புகை வந்ததால் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அதற்குள் கார் தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் காரின் முன்பகுதி எரிந்து நாசமானது. ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து சாலையில் சென்ற 2 கார்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.