வாலிபரிடம் நூதன முறையில் செல்போன் பறிப்பு

நூதனமுறையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கார் டிரைவரை சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Update: 2021-11-01 04:46 GMT
சென்னையை அடுத்த குரோம்பேட்டை, பாரதிபுரம், சங்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 28). இவர், நேற்று காலை வேலைக்கு செல்ல ராதா நகர் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது காரில் வந்த மர்மநபர், தான் வாடகை கார் ஓட்டுவதாகவும், பயணியை ஏற்றிச் செல்ல வந்ததாகவும் தனது செல்போன் ‘சுவிட்ச்ஆப்’ ஆகிவிட்டதால் வாடிக்கையாளரிடம் பேசிவிட்டு தருவதாக கூறி பிரவீன்குமாரிடம் செல்போனை கேட்டார். அதை உண்மை என நம்பிய அவர், டிரைவரிடம் நம்பரை கேட்டு தனது செல்போனில் அழைத்து எதிர்முனையில் இருந்தவரிடம் அவரை தேடி கார் வந்துள்ளதாக கூறினார். அதற்கு எதிர்முனையில் பேசியவர், டிரைவரிடம் செல்போனை கொடுங்கள் என பிரவீன் குமாரிடம் கூறினார். அவரும் டிரைவரிடம் செல்போனை கொடுத்தார். காருக்குள் அமர்ந்தபடியே செல்போனை வாங்கி பேசிய டிரைவர், திடீரென செல்போனுடன் காரை அங்கிருந்து வேகமாக ஓட்டிச்சென்றார். அதிர்ச்சி அடைந்த பிரவீன்குமார் ஓடிச் சென்று காருக்குள் கையைவிட்டு தனது செல்போனை வாங்க முயன்றபோது அவரை கீழே தள்ளிவிட்டு டிரைவர் வேகமாக சென்றுவிட்டார்.

இதில் பிரவீன்குமாருக்கு கை, கால் மற்றும் நெற்றியில் காயம் ஏற்பட்டது. இது குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதனமுறையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்