தாம்பரம், ஆவடி கமிஷனரகத்தில் புதிய போலீஸ் நிலையங்கள்

ஆவடி கமிஷனரகத்தில் புதிதாக 7 போலீஸ் நிலையங்கள் உருவாக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. தாம்பரத்தில் 6 புதிய போலீஸ் நிலையங்கள் உருவாக்கப்படும் என்று தெரிகிறது.

Update: 2021-11-01 03:05 GMT
புதிய போலீஸ் நிலையங்கள்

சென்னை போலீஸ் 3 ஆக பிரிக்கப்பட்டு தாம்பரம், ஆவடி புதிய போலீஸ் கமிஷனரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தின் தனி அதிகாரியாக கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. எம்.ரவி நியமிக்கப்பட்டு உள்ளார். ஆவடி கமிஷனரகத்தின் தனி அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் பொறுப்பேற்றுள்ளார்.

சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய கமிஷனரகங்களின் போலீஸ் நிலைய எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை போலீசில் 104 போலீஸ் நிலையங்கள் இருக்கும். ஆவடி கமிஷனரகத்தில் 25 போலீஸ் நிலையங்களும், தாம்பரத்தில் 20 போலீஸ் நிலையங்களும் அடங்கும் என்று ஏற்கனவே ஒரு தற்காலிக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் ஆவடி கமிஷனரகத்தில் கூடுதலாக அம்பத்தூர் புதூர், அயப்பாக்கம், மவுலிவாக்கம், எர்ணாவூர், திருமழிசை, காமராஜர் துறைமுகம், காந்திநகர் ஆகிய 7 போலீஸ் நிலையங்களை புதிதாக உருவாக்கி தரவேண்டும் என்று தனி அதிகாரி சந்தீப்ராய்ரத்தோர் அரசுக்கு சிபாரிசு செய்துள்ளார். அரசு அனுமதி வழங்கினால் ஆவடி கமிஷனரகத்தில் 32 போலீஸ் நிலையங்கள் இடம்பெறும். இதுபோல தாம்பரம் கமிஷனரகத்திலும் 6 புதிய போலீஸ் நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

8 துணை கமிஷனர்கள்

ஆவடி கமிஷனரகத்தில் கமிஷனருக்கு கீழ், 2 இணை கமிஷனர்களும், 8 துணை கமிஷனர்களும் பணியில் இருப்பார்கள் என்று தெரிகிறது. இதற்கும் அரசு ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. கூடுதல் கமிஷனர் பதவி இருக்காது என்று கூறப்படுகிறது.

ஆவடி கமிஷனரக தலைமை அலுவலகம் தற்காலிகமாக ஆவடி சிறப்பு காவல்படை வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் செயல்படலாம் என்று கூறப்படுகிறது. டி.ஜி.பி. சைலேந்திரபாபு அந்த கட்டிடத்தை பார்வையிட்டு சென்றுள்ளார்.

புதிய கட்டிடம்

ஆவடி கமிஷனரகத்தின் புதிய கட்டிடத்தை பிரமாண்டமாக கட்டவும் ஆலோசிக்கப்படுகிறது. அதற்காக நசரத்பேட்டையில் 18 ஏக்கர் நிலம் பார்க்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்துக்கும் தற்காலிக அலுவலகம் மற்றும் நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. தினமும் இது தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடக்கிறது.

மேலும் செய்திகள்