சேலத்தில் பரிதாபம்: மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் திருமண தரகர் தற்கொலை-போலீசார் விசாரணை
சேலத்தில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் திருமண தரகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சூரமங்கலம்:
சேலத்தில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் திருமண தரகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
திருமண தரகர்
சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 52), திருமண புரோக்கர். இவருடைய மனைவி மாரியம்மாள். கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது.
இதில் மன வேதனை அடைந்த மாரியம்மாள், கணவரிடம் கோபித்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
நேற்று முன்தினம் காலையில் சிவலிங்கத்தின் வீட்டுக்கதவு நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர். கதவு திறக்கப்படவில்லை இதுகுறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு மின்விசிறியில் சிவலிங்கம் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது. உடனே சிவலிங்கத்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.