சிவகாசியில் 2 மணி நேரம் பலத்த மழை

சிவகாசியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டது.

Update: 2021-10-31 20:55 GMT
சிவகாசி, 
சிவகாசியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டது. 
பட்டாசு உற்பத்தி பாதிப்பு 
சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் கடைசி நேர உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென மழை பெய்ய தொடங்கியது. 
பலத்த இடியுடன் பெய்த மழை 2 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. இதனால் நகரில் பல இடங்களில் மழைநீர் சாலைகளில் தேங்கியது. பஸ் நிலையத்தின் உள்ளே இருந்து மழை நீர் வெளியேற போதிய வசதி இல்லாததால் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
விற்பனை பாதிப்பு 
 பஸ் நிலையம் உள்ள பகுதியில் மிகவும் தாழ்வான பகுதி என்பதால் ரோட்டில் இருந்து மழை நீர் பஸ்நிலையத்துக்குள் சென்றது. சிவகாசி பகுதியில் உள்ள நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கிய நிலையில் நேற்று காலையில் பொது மக்கள் ஆர்வமுடன் கடைவீதிக்கு வந்தனர். 
இதனால் பஜார் பகுதியில் கூட்டநெரிசல் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் மதியம் பெய்த திடீர் மழையால் மாலையில் கடைவீதி வெறிச்சோடி கிடந்தது. இந்த திடீர் மழையால் தீபாவளி விற்பனை வெகுவாக பாதித்தது. 
அதே போல் சிவகாசியில் உள்ள பட்டாசு கடைகளில் பட்டாசு வாங்க வெளியூர்களில் இருந்து பட்டாசு பிரியர்கள் வந்திருந்தனர். அவர்களும் திடீர் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்