பட்டாசு கடைகளில் கலெக்டர் ஆய்வு

விருதுநகரில் பட்டாசு கடைகளில் கலெக்டர் மேகநாத ரெட்டி ஆய்வு செய்தார்.

Update: 2021-10-31 20:41 GMT
விருதுநகர், 
விருதுநகரில் பட்டாசு கடைகளில் கலெக்டர் மேகநாத ரெட்டி ஆய்வு செய்தார். 
 உத்தரவு 
தீபாவளி பண்டிகையையொட்டி சாதாரண வகையான பட்டாசுகளை வெடிக்க தடை இல்லை என்றும் பேரியம் வேதியல் பொருட்களை கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடிகள் உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும், சேமித்து வைக்கவும் தடை விதித்து உத்தரவிட்டது.
 மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அதிகாரிகள் மற்றும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் மேகநாதரெட்டி ஏற்கனவே பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பேரியம், வேதியல் பொருட்கள் கலந்த பட்டாசுகளை உற்பத்தி செய்யவோ விற்பனை செய்யவோ சேமித்து வைக்கவோ கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
கலெக்டர் ஆய்வு 
 இந்தநிலையில் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் பட்டாசு கடைகளை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தினார். இதனையடுத்து பட்டாசு கடைகளில் தாசில்தார் மற்றும் கோட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விருதுநகரில் உள்ள பட்டாசு கடைகளில் கலெக்டர் மேகநாதரெட்டி நேரடி ஆய்வு மேற்கொண்டார். கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசு ரகங்களை ஆய்வு செய்தார். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சரவெடிகளை பறிமுதல் செய்தார். மேலும் பட்டாசு கடைகளில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக பேரியம் வேதிப்பொருள் கலந்த பட்டாசுகள் மற்றும் சரவெடிகளை விற்பனைக்கு வைத்திருந்தால் பட்டாசு கடை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் உரிமதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
 இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், தாசில்தார் செந்தில்வேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்