மூதாட்டி கொலையில் பெண்கள் உள்பட 5 பேர் கைது
விஜயநகரில் மூதாட்டி கொலையில் பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு:
மூதாட்டி கொலை
விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டே புறநகர் ராணிபேட்டே கிராமத்தை சேர்ந்தவர் புவனேஷ்வரி (வயது 68). இவரது சகோதரி சிவபூதணம்மா. இவர்கள் 2 பேரும் தங்களது வீட்டிலேயே துணி வியாபாரம் செய்து வந்தார்கள்.
கடந்த மாதம் (அக்டோபர்) 22-ந் தேதி துணி வாங்குவது போல் நடித்து வீட்டுக்கு வந்த மா்மநபர்கள், புவனேஷ்வரி, சிவபூதணம்மாவின் கை, கால்களை கட்டியும், வாயில் துணியை வைத்து அமுக்கியதுடன், 2 பேரையும் தாக்கி இருந்தனர்.
5 பேர் கைது
பின்னர் புவனேஷ்வரி வீட்டில் இருந்த ரூ.3 லட்சம், ரூ.3½ லட்சம் தங்க நகைகள், விலை உயர்ந்த துணிகளை கொள்ளையடித்து சென்றிருந்தனர். வாயில் துணியை வைத்திருந்ததால் புவனேஷ்வரி உயிர் இழந்தார். சிவபூதணம்மா படுகாயத்துடன் உயிர் பிழைத்திருந்தார். இதுகுறித்து ஒசப்பேட்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். 3 தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், மூதாட்டியை கொலை செய்ததாக தலைமறைவாக இருந்து வந்த பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் மன்னனவர் (25), நாகராஜ் (24), பீரேஷ் (23), கீதா (31), பிரமிளா (28) ஆகிய 5 பேரையும் ஒசப்பேட்டே போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 5 பேரும், புவனேஷ்வரி, சிவபூதணம்மா தனியாக வசிப்பதை அறிந்தும், அவர்களிடம் ஏராளமான பணம் இருப்பதை தெரிந்து கொண்டு துணி வாங்குவது போல் வந்து புவனேஷ்வரியை கொலை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
கைதான 5 பேர் மீதும் ஒசப்பேட்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.