1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் இன்று திறப்பு; சுகாதார ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர்
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இன்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகிறது. இதையொட்டி சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்படுகிறது.
கொரோனா பரவல்
கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2-வது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தொற்று குறைந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. கல்லூரிகளும் திறக்கப்பட்டது. ஆனால் கடந்த 19 மாதங்களாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாமல் இருந்தது.
1 முதல் 8-ம் வகுப்பு வரை
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை தயார்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர் இளங்கோவன் முன்னிலையில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கழிப்பறைகள் சுத்தம் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மேலும் மாணவ-மாணவிகள் கட்டாயம் முககவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.