சகோதரர் மனைவியை கொன்றுவிட்டு பெண் தற்கொலை

ஹாவேரி அருகே சகோதரர் மனைவியை கொன்றுவிட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2021-10-31 20:32 GMT
பெங்களூரு:

ஹாவேரி மாவட்டம் சிக்காம்வி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ராஜனகட்டே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 50). இவரது கணவரின் சகோதரி ஜெயம்மா (50). இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். நேற்று மஞ்சுளாவும், ஜெயம்மாவும் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்கள். குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்றிருந்தனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த மஞ்சுளாவுக்கும், ஜெயம்மாவுக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த மஞ்சுளா வீட்டில் கிடந்த ஆயுதத்தை எடுத்து ஜெயம்மாவை தாக்கியதாக தெரிகிறது. இதில், பலத்த காயம் அடைந்த ஜெயம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

  பின்னர் வீட்டில் இருந்த மஞ்சுளா மற்றொரு அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சிக்காம்வி போலீசார் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் ஜெயம்மா, மஞ்சுளாவின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது ஜெயம்மாவை கொலை செய்துவிட்டு மஞ்சுளா தற்கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் என்ன காரணத்திற்காக இந்த சம்பவம் நடந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து சிக்காம்வி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்