கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
பாளையங்கோட்டையில் கடையின் பூட்டை உடைத்து பணத்தை மர்மநபர் திருடிச் சென்றார்.;
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை திருநாவுக்கரசு நாயனார் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் கோட்டூர் சாலையில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். கடந்த 29-ந்தேதி கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பிய ராமச்சந்திரன் மீண்டும் நேற்று முன்தினம் காலையில் கடைக்கு சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த ரூ.15 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் அவர் சேர்த்து வைத்த உண்டியல் பணம் ரூ.3 ஆயிரத்தை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ராமசந்திரன் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
இதேபோல் கொக்கிரகுளத்தில் உள்ள இசக்கியம்மன் கோவிலில் சம்பவத்தன்று புகுந்த மர்ம நபர் ஒருவர், கோவில் உண்டியலில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிச் சென்று உள்ளனர். மேலும் மேலபாளையத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலிலும் மர்மநபர் உண்டியல் பணம் திருடியதாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.