புதுச்சேரியில் வெளுத்து வாங்கிய மழை
புதுவையில் வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி, நவ.1-
புதுவையில் வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முதலியார்பேட்டையில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காற்றழுத்த தாழ்வுநிலை
புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் புதுவையில் நேற்று அதிகாலை முதலே வானில் கருமேகங்கள் திரண்டு வந்தன. தொடர்ந்து இடி முழங்கியது. குளிர்ந்த காற்று வீசியது. பகல் 12 மணி அளவில் லேசான மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழை கொட்டியது. இந்த மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
சாலைகளில் வெள்ளம்
பலத்த மழையால் புஸ்சி வீதி, அண்ணா சாலை, சுப்பையா சாலை, ரெயின்போ நகர், இந்திராகாந்தி சிலை சதுக்கம் மற்றும் நகரின் தாழ்வாக உள்ள தெருக்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தன. இதனால் அந்த பகுதிகளில் வாகனங்கள் தண்ணீரில் மிதந்தபடி செல்வதை காண முடிந்தது. வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள், பாத்திரங்கள் மூலம் வீட்டில் புகுந்த தண்ணீரை வெளியேற்றினர். புதுச்சேரியில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2.3 செ.மீ. மழை பதிவானது.
மின்கம்பி அறுந்து விழுந்தது
பலத்த மழையின்போது முதலியார்பேட்டை வெள்ளாளர் வீதியில் 2-வது குறுக்கு தெருவில் மதியம் 1.30 மணியளவில் திடீரென மின்கம்பத்தில் உள்ள 2 மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. அதிர்ஷ்ட வசமாக அந்த பகுதியில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
இது குறித்து அந்த பகுதி மக்கள் மின்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மின்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து வந்து மின்இணைப்பை துண்டித்தனர். பின்னர் கொட்டும் மழையில் அறுந்து விழுந்த மின்கம்பியை சரி செய்தனர். இதன்பின் மாலை 5.30 மணிக்கு மேல் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
தீபாவளி விற்பனை பாதிப்பு
இன்னும் 3 நாட்களில் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் இந்த மழை காரணமாக ஜவுளி, பொருட்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. வர்த்தக நிறுவனங்கள் அதிகமுள்ள நேரு வீதி, காந்தி வீதி, மிஷன் வீதி, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் வரை மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் மழை காரணமாக மதியத்துக்கு மேல் கூட்டமின்றி அந்த சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் சண்டே மார்க்கெட்டில் தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று காலை முதல் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். இதற்கிடையே பகல் 12.30 மணியளவில் திடீரென மழை பெய்ததால் மக்கள் கலைந்து சென்றனர். ஒரு சிலர் மட்டும் குடைகளை பிடித்தபடி வந்து பொருட்களை வாங்கினர். மழை ஓய்ந்த பிறகு குறைந்த அளவிலான மக்களே வந்திருந்தனர்.
வீட்டிலேயே முடங்கினர்
மழையின் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூங்கா, கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.