100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் சாய்ந்தது
தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பஸ் நிறுத்தத்தில் இருந்த பழமையான ஆல மரம் தொடர் மழையால் வேரோடு சாய்ந்தது. டீக்கடை-2 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்ததுடன் 3 பேர் காயம் அடைந்தனர்.;
தஞ்சாவூர்:
தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பஸ் நிறுத்தத்தில் இருந்த பழமையான ஆல மரம் தொடர் மழையால் வேரோடு சாய்ந்தது. டீக்கடை-2 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்ததுடன் 3 பேர் காயம் அடைந்தனர்.
பழமைவாய்ந்த ஆலமரம்
தஞ்சை-புதுக்கோட்டை சாலை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பஸ் நிறுத்தத்தில் சாலையோரம் ஏறத்தாழ 100 ஆண்டு கால பழமைவாய்ந்த ஆல மரம் இருந்தது. இந்த ஆலமரம் அந்த பகுதிக்கு அடையாளமாக இருந்ததால் ஆலமர பஸ் நிறுத்தம் என்றே அழைக்கப்பட்டது. படர்ந்து விரிந்து காணப்பட்ட இந்த மரம் அந்த பகுதியில் நிழல் தரக்கூடிய நிழலகமாகவும் திகழ்ந்து வந்தது. கோடை காலத்தில் வெயிலுக்கு இதமாக மக்களுக்கு நிழல் தந்து வந்தது.
இந்தநிலையில் சாலை விரிவாக்கம் காரணமாக சாலையோரம் இருந்த ஆலமரத்தின் கிளைகள், விழுதுகள் அகற்றப்பட்டன. இப்படி படிப்படியாக அகற்றப்பட்டு வந்ததால், மரத்தின் ஒரு புறத்தில் கிளைகளும், விழுதுகளும் பெரும்பாலும் இன்றி இருந்து வந்தது. மறுபுறத்தில் மட்டுமே கிளைகளும், வேர்களும் அதிகஅளவில் இருந்தது. இந்த மரத்தின் அடியில் தான் பஸ்சிற்காக மக்கள் காத்து நிற்பார்கள்.
வேரோடு சாய்ந்தது
மேலும் மரத்தின் நிழலில் டீக்கடை ஒன்றும் செயல்பட்டு வந்தது. மாலை நேரத்தில் பால்வியாபாரம், தள்ளுவண்டியில் வைத்து கடலை வியாபாரமும் நடைபெற்று வந்தது. தஞ்சை மாநகரில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுஅதிகாலை முதல் இடைவிடாமல் மழை பெய்து கொண்டிருந்தது. தொடர் மழையின் காரணமாக ஆலமரம் நேற்றுமாலை வேரோடு சாய்ந்து விழுந்தது. மெயின் சாலையின் குறுக்கே விழாமல் புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்கு செல்லக்கூடிய சாலையின் குறுக்கே விழுந்தது.
மரம் சாய்ந்த நேரத்தில் ஆர்.ஆர்.நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அவர், மரம் சாய்ந்து விழுவதை பார்த்தவுடன் ஸ்கூட்டரை அப்படியே போட்டு விட்டு ஓடிவிட்டார். மேலும் பால் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட பால்கேன்களுடன் மோட்டார் சைக்கிளும், தள்ளுவண்டியும் கிளைகளுக்குள் சிக்கி கொண்டது. மரத்தடியில் இருந்த டீக்கடை முழுமையாக சேதம் அடைந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் டீக்கடைக்கு விடுமுறை விடப்பட்டதால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது.
மின்வினியோகம் தடைபட்டது
ஆலமரம் மெயின் சாலையில் விழாமல் மறுபுறம் சாய்ந்ததால், போக்குவரத்தில் பாதிப்பு இல்லை. ஆனால் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் மரக்கிளைகள் மின்கம்பிகள் மீது விழுந்ததால் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் மின்கம்பம் ஒன்று சேதம் அடைந்தது. மேலும் சில வீடுகளுக்கு சென்ற மின்வயர்களும் அறுந்து விழுந்தது. இதனால் மின்சார வினியோகம் தடைபட்டது.
இந்த தகவலை அறிந்த தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாரும், தஞ்சை தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் ஆர்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் சிலர் அரிவாளை எடுத்து வந்து கிளைகளை வெட்டி, உள்ளே சிக்கியிருந்த ஸ்கூட்டரையும், மோட்டார் சைக்கிளையும் வெளியே எடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் டீக்கடைக்குள் இருந்த சிலிண்டரை வெளியே கொண்டு வந்தனர்.