வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் பொருட்டு 1,701 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் பொருட்டு 1,701 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்து உள்ளார்.
பெரம்பலூர்,
வடகிழக்கு பருவமழை
பெரம்பலூர் மாவட்டத்தில் 8 இடங்கள் மழை வெள்ளத்தினால் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு மாவட்டம் முழுவதும் 67 நிவாரண முகாம்கள் உரிய வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் இடி-மின்னலுடன் கூடிய கனமழையின்போது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பான முறையில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நீர்நிலைப்பகுதிகளில் வேடிக்கை பார்க்கும் செயல்களை தவிர்க்க வேண்டும். தொடர் மழைக்காலங்களில் மண்சுவருடன் கூடிய குடிசை வீடுகள், இடியும் நிலையில் உள்ள வீடுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வாழும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
பழுதடைந்த மின்கம்பங்கள்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் பொருட்டு ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் முன்னெச்சரிக்கை குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு, பொதுமக்களை பாதுகாத்திடும் குழு மற்றும் நிவாரணம் மற்றும் பாதுகாப்பு உறைவிடம் நிர்வகிக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டு சுமார் 1,701 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் போன்றவற்றை சரிசெய்திடும் பொருட்டும், வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளில் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக அவசர கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1077 மற்றும் 1800-425-4556 ஆகியவைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
தாமினி செயலி
மேலும் தற்போது மின்னல் தாக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு அனைத்து மக்களும் தங்கள் பகுதியில் மின்னல் வருவதை முன்கூட்டியே அறிந்திடும் வண்ணம் தாமினி என்கிற புதிய செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
எனவே அரசு தெரிவிக்கும் நிலையான வழிமுறைகளை பின்பற்றி பருவமழைக்காலங்களில் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.