1 முதல் 8-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் இன்று திறப்பு

19 மாதங்களுக்கு பிறகு இன்று 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-10-31 18:34 GMT
கரூர்
பள்ளிகள் திறப்பு
தமிழக அரசின் உத்தரவின்படி 19 மாதங்களுக்கு பிறகு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதன்படி கரூர் மாவட்டத்தில் 820 அரசு பள்ளிகளும், 60 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 1,062 தனியார் பள்ளிகளும் இயங்கி வருகிறது. அதன்படி பள்ளிகளில் கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறப்பதற்காக அந்தந்த பள்ளிக்கூடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 
தெர்மல் ஸ்கேனர்
மேலும், வகுப்பறைகளுக்கு செல்வதற்கு முன்பு மாணவ-மாணவிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க, தெர்மல் ஸ்கேனர் கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கைகளை சுத்தம் செய்வதற்கு சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வகுப்பறைகளிலும் மாணவ-மாணவிகள் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் கை கழுவும் இடங்களிலும் சோப்பு, கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வகுப்பறையில் மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமருவதற்கு வசதியாக இருக்கைகள் இடைவெளி விட்டு போடப்பட்டுள்ளன.  
விழிப்புணர்வு வாசகங்கள்
அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள், பதாகைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாணவ-மாணவிகளும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிக்கு வருகை தரும் மாணவ-மாணவிகளை இனிப்பு, மலர் கொத்து கொடுத்து வரவேற்க ஆசிரியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்