கீரமங்கலத்தில் விபத்துகளை ஏற்படுத்தும் உடைந்த கல்பாலம் சீரமைக்காததை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு
கீரமங்கலத்தில் பல ஆண்டுகளாக உடைந்து அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் கல்பாலத்தை சீரமைக்காத நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.
கீரமங்கலம்:
உடைந்த கல்பாலம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம்-அறந்தாங்கி பிரதான சாலையிலிருந்து குளமங்கலம் விலக்கு சாலை எதிரே செல்லும் பட்டவய்யனார் கோவில் சாலையில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ-மாணவிகள் சைக்கிள்களில் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். அதே போல கீரமங்கலம் மேற்கு, பனங்குளம், குளமங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கீரமங்கலம் கடைவீதிக்கு செல்ல இந்த சாலையையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை ஆங்காங்கே உடைந்து சேதமடைந்து மழைத்தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அதேபோல சாலையின் தொடக்கத்தில் உள்ள பழயை கல்பாலம் பல வருடங்களாக உடைந்துள்ளது.
உடைந்த கல்பாலத்தால் விபத்து
கடந்த சில வருடங்களுக்கு முன்பு கல் பாலத்தில் உள்ள கற்கள் ஒவ்வொன்றாக உடைந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்ட நிலையில் விபத்துகளை தவிர்க்க அப்பகுதி இளைஞர்கள் மண் கொட்டி அடையாளக் கொடி நட்டிருந்தனர். அதன் பிறகும் சில வருடங்களாக பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால் தொடர்ந்து அடுத்தடுத்த கற்களும் உடைந்துள்ளது. அதனால் உடைந்த கற்கள் மறையும் அளவில் மழைத் தண்ணீர் நிரைந்து நிற்பதால் அந்த வழியாக சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்லும் பொது மக்கள் அடிக்கடி விழுந்து எழுந்து செல்கின்றனர். தொடர்ந்து பல வருடமாக கவணிப்பின்றி கிடக்கும் விபத்துகளை ஏற்படுத்தும் கல்பாலத்தை சீரமைத்து சாலையை செப்பனிடக்கோரி அப்பகுதி பொதுமக்களும் இளைஞர்களும் விரைவில் போராட்டம் நடத்த உள்ளதாக கூறுகின்றனர்.