தடைசெய்யப்பட்ட பட்டாசு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும். மாவட்ட தீயணைப்பு அலுவலர் எச்சரிக்கை
திருப்பத்தூர் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட தீயணைப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.;
திருப்பத்தூர்
திருப்பத்தூர் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட தீயணைப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
பட்டாசு கடைகளில் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பட்டாசு கடைகள் வைக்கப்பட்டுள்ளது. இக்கடைகள் வைப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டது. இந்தநிலையில் திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மாவட்ட அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷின் தடையின்மை சான்று வழங்கிய பட்டாசு கடைகளை மறு ஆய்வு செய்தார்.
உரிமம் ரத்து
மேலும் பட்டாசு கடைகளில் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறதா என்றும், பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் பார்வையிட்டார். தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் திருப்பத்தூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்புத்துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இந்த ஆய்வின் போது உதவி மாவட்ட அலுவலர் பழனி, திருப்பத்தூர் நிலைய அலுவலர் அசோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.