ராணிப்பேட்டை மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு 25 சதவீத மானியத்துடன் தொழில் கடன்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு 25 சதவீத மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-31 17:36 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு 25 சதவீத மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

25 சதவீத மானியத்தில் கடன்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொருளாதார அடிப்படையில் நலிவுற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்கும் விதத்தில் 25 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

18 வயதிற்கு மேற்பட்ட அதிகபட்சம் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இதற்கு தகுதியுடையவர்கள். சிறப்பு பிரிவினரான ஆதிதிராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு வயது வரம்பு 45.

கல்வித்தகுதி

குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்ச முதலீட்டு தொகை ரூ.15 லட்சம், சேவை மற்றும் வியாபாரத் தொழில்களுக்கு அதிகபட்ச முதலீட்டு தொகை ரூ.5 லட்சம் கடன் உதவியாக பெறலாம். கடனுக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மானியம் பெற்று பயன் பெறலாம்.
தொழில்கள்

இத்திட்டத்தில் ஜவுளி வியாபாரம் பலசரக்கு மற்றும் அனைத்து வியாபாரம் சார்ந்த தொழில்கள், டெய்லரிங், செல்போன் சர்வீஸ், ஜெராக்ஸ், பியூட்டி பார்லர், பயணிகள் ஆட்டோ, பேட்டரி மற்றும் மிட்டாய் தயாரிப்பு, கயிறு தயாரித்தல், கடலை மிட்டாய் தயாரிப்பு, மரசெக்கு எண்ணெய், ஊறுகாய், ஜாம், ஊதுபத்தி மற்றும் கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரித்தல், டீ கடை, டிபன் கடை, அரிசி விற்பனை, பினாயில் தயாரித்தல், அப்பளம் தயாரித்தல், ஆண்கள் அழகு நிலையம், டைல்ஸ் கடை, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, தோல் பொருட்கள் தயாரித்தல், ஸ்டீல் கட்டில், பீரோ மற்றும் அதை சார்ந்த தொழில்களும் தொடங்கலாம்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்ணப்பம் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருவதால் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்