உளுந்தூர்பேட்டை அருகே குடியிருப்புகளை சீரமைத்து தரக்கோரி நரிக்குறவர்கள் சாலை மறியல்
உளுந்தூர்பேட்டை அருகே குடியிருப்புகளை சீரமைத்து தரக்கோரி நரிக்குறவர்கள் சாலை மறியல்
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் உள்ள அன்னை தெரசா நகர் பகுதியில் நரிக்குறவர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கட்டி தரப்பட்ட இந்த குடியிருப்பு தற்போது சிதிலம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை சீரமைத்து தர வேண்டும் அல்லது குடியிருப்புகளை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய வீடு கட்டித்தர வேண்டும்என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று அதிகாலை பெய்த மழையில் வீட்டின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர் பெயர்ந்து விழுந்ததால் அச்சம் அடைந்த நரிக்குறவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிதிலம் அடைந்த வீடுகளை உடனடியாக இடித்துவிட்டு புதிய வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட நரிக்குறவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினை குறித்து உடனடியாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று வீடுகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர் இதனை ஏற்று நரிக்குறவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.