மு.க.ஸ்டாலின் இன்று வேலூர் வருகை. இலங்கை அகதிகளுக்கு வீடு கட்டும் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார்

இலங்கை அகதிகளுக்கு குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை வேலூரில் நாளை (செவ்வாய்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதற்காக அவர் இன்று (திங்கட்கிழமை) வேலூருக்கு வருகிறார்.

Update: 2021-10-31 17:22 GMT
வேலூர்

இலங்கை அகதிகளுக்கு குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை வேலூரில் நாளை (செவ்வாய்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதற்காக அவர் இன்று (திங்கட்கிழமை) வேலூருக்கு வருகிறார். இதையொட்டி பாதுகாப்பு பணியில் 900 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இலங்கை அகதிகளுக்கு வீடுகள்

தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கு குடியிருப்புகள் கட்டும் பணி தொடக்க விழா மற்றும் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் நாளை (செவ்வாய்கிழமை) காலை                         10 மணிக்கு நடைபெற உள்ளது.

விழாவில் தமிழக  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இலங்கை அகதிகள் குடும்பங்களுக்கு குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். பின்னர் மேல்மொணவூரில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

இன்று வருகை

இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னையில் இருந்து காரில் வேலூருக்கு புறப்படுகிறார். இரவு 7 மணியளவில் வேலூருக்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பத்தில் வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. முதல்-அமைச்சராக பதவியேற்றபின் அவர் முதல்முறையாக வேலூர் வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அவர் வேலூர் அண்ணாசாலையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்று இரவு உணவருந்தி விட்டு, அங்கு ஓய்வெடுக்கிறார்.

அதைத்தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில் சுற்றுலா மாளிகையில் இருந்து காரில் விழா நடைபெறும் இடத்துக்கு  அவர் செல்கிறார். விழாவில் மேல்மொணவூரில் வசிக்கும் 220 இலங்கை அகதிகள் குடும்பங்கள் உள்பட 3,510 குடும்பங்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். 

பின்னர் மேல்மொணவூர் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் ரூ.48 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் சாலைவசதி, கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி, 162 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, பணக்கொடை உயர்த்தி வழங்குதல், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு உயர்த்தப்பட்ட சுழல்நிதி, சமுதாய முதலீட்டு நிதி, புத்தாடைகள், பாத்திரங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இதில், அமைச்சர்கள், அரசுத்துறை செயலர்கள், எம்.பி., எம்.எல் ஏ.க்கள், அரசுத்துறை அதிகாரிகள், பயனாளிகள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

இதனை யொட்டி அப்துல்லாபுரத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் விழாவிற்கான மேடை மற்றும் பயனாளிகள் அமருவதற்கான மேற்கூரை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அமைச்சர்கள் ஆய்வு

இதனை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், ஆர்.காந்தி, வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், குடியுரிமை பெறாத தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோருடன் நேற்று நேரில் பார்வையிட்டு பார்வையிட்டார். 

ஆய்வின்போது வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, உதவி கலெக்டர்    விஷ்ணுபிரியா மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
பாதுகாப்பு பணியில்   900 போலீசார்
முதல்-அமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வேலூர் சரக டி.ஐ.ஜி. பாபு தலைமையில் போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வகுமார் (வேலூர்), தீபாசத்யன் (ராணிப்பேட்டை), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்), வருண்குமார் (திருவள்ளூர்) ஆகியோர் மேற்பார்வையில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 முதல்-அமைச்சரின் பாதுகாப்பு படையினர் இன்று வேலூருக்கு வருகை தர உள்ளனர். அவர்கள் சுற்றுலா மாளிகை மற்றும் விழா நடைபெறும் இடம், சுற்றுலா மாளிகையில் இருந்து விழா நடைபெறும் இடத்துக்கு செல்லும் வழியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்து, ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கொரோனா தடுப்பூசி

நலத்திட்ட உதவிகள் பெறும் இலங்கை அகதிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டன. ஆனாலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களின் உடல் வெப்பநிலை விழா தொடங்கும் முன்பாக பரிசோதனை செய்யப்படும். அதில், எவ்வித பிரச்சினையும் இல்லை என்றால் மட்டுமே முதல்-அமைச்சரிடம் இருந்து நலத்திட்ட உதவிகள் பெற அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பதவியேற்றபின் முதல்முறையாக வேலூர் வருவதால் அவருக்கு தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்