உடுமலை,
உடுமலையில் கல்பனா சாலையில் பாதாள சாக்கடை தொட்டியின் மூடிபகுதி பழுதடைந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்வதால் நோய்பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை திட்ட தொட்டி
உடுமலை நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தில் சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டுகுழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில் ஆங்காங்கு ஆள்நுழை இறங்குகுழி தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.வீடுகளில் சேகரமாகும் கழிவுநீர், குழாய் மூலம் இந்த தொட்டிகளுக்கு வந்து சேரும் வகையில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிகளுக்கு வந்து சேரும் கழிவுநீர் பிரதான குழாய்மூலம் ஏரிப்பாளையத்தை அடுத்துள்ள நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று சேரும். இந்த நிலையில் சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது, ஆங்காங்குள்ள ஆள்நுழை இறங்குகுழி தொட்டிகளின் மூடிகள் மீது ஏறி, இறங்கி செல்வதால் தொட்டிகளின் மூடி பழுதடைகிறது. அவ்வாறு பழுதடையும் மூடிகளுக்கு பதிலாக புதிய மூடிகளை அமைத்து கட்டுமான பணிகள், நகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.இதுதொடர்கதையாக உள்ளது.
கல்பனாசாலை
அதேபோன்று உடுமலை மத்திய பஸ்நிலையத்திற்கு தெற்கு புறம் கல்பனா சாலையில் உள்ள பாதாள சாக்கடை திட்ட தொட்டியின் மூடியும் அடிக்கடி பழுதடைந்து வருகிறது. இந்த சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாகும்.இந்த சாலையில் மருத்துவ மனைகள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், விளையாட்டு மைதானம் ஆகியவை உள்ளன. இந்த நிலையில் நேற்று இந்த தொட்டியின் மூடி மீண்டும் பழுதடைந்து கழிவுநீர் சாலையில் ஓடுகிறது.
அத்துடன் பிற்பகலில் மழை பெய்ததால் மழைத்தண்ணீரும், கழிவுநீரும் சேர்ந்து சாலையில் ஆறாக ஓடியது. அதில் பொதுமக்கள் நடந்து சென்றனர்.
அதனால் நோய் வரக்கூடிய சூழல் உருவாகும் என்பதால், பழுதடைந்துள்ள அந்த மூடியை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.