பெண்களிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

பெண்களிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

Update: 2021-10-31 16:55 GMT
பேரூர்,

தொண்டாமுத்தூர் அருகே பெண்களிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வட்டிக்கு பணம்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே ஓணாப்பாளையத்தை சேர்ந்தவர் குணசுந்தரி (வயது 42). இவருடைய தோழி தமிழ்ச்செல்வி (40). இவர்கள் தொண்டாமுத்தூர் அரசு பள்ளி அருகே டெய்லர் கடை நடத்தி வருகின்றனர். 

அதே பகுதியில் டயர் கடை நடத்தி வருபவர் ஆனந்தன் (42). குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணமூர்த்தி (40).

இந்த நிலையில் குணசுந்தரி, தமிழ்ச்செல்வி ஆகியோர், ஆனந்தன், சரவணமூர்த்தி ஆகியோரிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளனர். கொரோனா காரணமாக போதிய வருமானம் இல்லாததால் அவர்கள் வாங்கிய பணத்துக்கு வட்டி கட்ட முடிய வில்லை.

கொலை மிரட்டல்

இதனால் ஆனந்தன், சரவணமூர்த்தி ஆகியோர் வட்டிப்பணம் கேட்டு தொல்லை கொடுத்து உள்ளனர். மேலும், குணசுந்தரி, தமிழ்ச்செல்வி ஆகியோரின் வீட்டுக்கு ஆனந்தன், அவருடைய மனைவி மல்லிகா மற்றும் சரவணமூர்த்தி ஆகியோர் சென்று பணத்தை திருப்பி தர கேட்டு, தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் புகார் மனு கொடுத்தனர். அதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

2 பேர் கைது

அதன்பேரில், தொண்டாமுத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில், பெண்களிடம் கந்துவட்டி கேட்டு ஆனந்தன், மல்லிகா, சரவணமூர்த்தி ஆகியோர் மிரட்டியது உறுதியானது. 

இதைத்தொடர்ந்து, ஆனந்தன், அவரது மனைவி மல்லிகா மற்றும் சரவணமூர்த்தி ஆகிய 3 பேர் மீது, கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஆனந்தன், சரவணமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்