வேலூர் மாநகராட்சி பகுதியில் பயன்பாட்டுக்கு வரும் முன்பே சேதமடைந்த நடைபாதைகள். பெயரளவில் பணிகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

வேலூர் மாநகராட்சி பகுதியின் பல்வேறு பகுதியில் ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் அமைக்கப்பட்ட நடைபாதைகள் பயன்பாட்டிற்கு வரும் முன்பே சேதமடைந்து காணப்படுகின்றன. பெயரளவில் பணிகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

Update: 2021-10-31 16:50 GMT
வேலூர்

வேலூர் மாநகராட்சி பகுதியின் பல்வேறு பகுதியில் ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் அமைக்கப்பட்ட நடைபாதைகள் பயன்பாட்டிற்கு வரும் முன்பே சேதமடைந்து காணப்படுகின்றன. பெயரளவில் பணிகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

திட்டமிடுதல் இல்லை

வேலூர் மாநகராட்சி பகுதியில் ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் சுமார் ரூ.1,000 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், கழிவுநீர் கால்வாய், சாலை அமைத்தல், மல்டிலெவல் கார் பார்க்கிங், மழைநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகள் குறிப்பிடத்தக்கவைகளாகும். ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. அனைத்து பணிகளும் 2021-ம் ஆண்டிற்குள் முடிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் சரியான திட்டமிடுதல், நிர்வாக திறன் இன்மையால் பாதியளவு பணிகள் கூட இன்னும் நிறைவடையவில்லை. அதனால் பொதுமக்கள் தினமும் அவதியடைந்து வருகிறார்கள்.
குறிப்பாக கழிவுநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்துக்காக அனைத்து சாலைகளிலும் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டன. பாதாள சாக்கடை தொட்டி மற்றும் குழாய் பதிக்கப்பட்ட பின்னரும் அந்த சாலைகள் சரியாக சீரமைக்கப்படவில்லை. தற்போது வரை குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகள் மழைநேரத்தில் சேறும், சகதியுமாக மாறுகிறது. அதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அந்த சாலை வழியாக செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

பயன்பாட்டிற்கு முன்பே சேதம்

அதனால் பொதுமக்கள் சாலையோரம் அமைக்கப்பட்ட நடைபாதையில் செல்கிறார்கள். ஆனால் அவையும் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. அதனால் பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருகிறார்கள். நடைபாதையில் தரமற்ற கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. பெயரளவில் செய்யப்பட்ட பணியால் பல இடங்கள் சேதடைந்து உள்ளது. அங்கு பதிக்கப்பட்ட கற்கள் ஆங்காங்கே பெயர்ந்து உள்ளது. நடைபாதையில் காலணி அணியாமல் பொதுமக்கள் சென்றால் பாதங்களை குத்தி கிழித்து ரத்தத்தை வரவழைத்து விடும்.

பெரும்பாலான இடங்களில் கழிவுநீர் கால்வாயின் மேற்பகுதியில் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களால் நடைபாதை பணிகள் இன்னும் முழுமை அடையாமல் காணப்படுகிறது. கழிவுநீர் கால்வாயில் உள்ள மின்கம்பத்தை அகற்றாமல் அப்படியே நடைபாதை அமைத்துள்ளனர். அதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையும் காணப்படுகிறது.

பெயரளவில் நடைபெறும் பணிகள்

வேலூர் மண்டித்தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபாதை அமைக்கப்பட்டு, கற்கள் பதிக்கப்பட்டது. அதன் இருபுறமும் கம்பிகள் பொருத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே பல இடங்களில் நடைபாதை சேதமடைந்து கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதேபோன்று காட்பாடி காந்திநகர், காகிதப்பட்டறை எல்.ஐ.சி. காலனி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள நடைபாதைகளும் பயன்பாட்டிற்கு வரும் முன்பே சேதமடைந்து காணப்படுகிறது.

வேலூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நடைபெற்று வரும் பெரும்பாலான பணிகள் பெயரளவில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். பணிகள் குறித்து சரியான திட்டமிடுதல் இல்லை. அதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களை கண்டித்து பணிகளை விரைந்து மேற்கொள்ளாமல் அலட்சிய போக்குடன் உள்ளனர். 

எனவே ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நடக்கும் அனைத்து பணிகளையும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து, பணிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்