22¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
22¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 22¾ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
முதலில் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், செவிலியர்களுக்கு செலுத்தப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி வந்தது. முதலில் தயக்கம் காட்டி வந்த பொதுமக்கள், கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வந்தவுடன் உற்சாகமாக தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.
22 லட்சத்து 82 ஆயிரத்து 259 பேருக்கு...
பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்த மெகா தடுப்பூசி முகாம்களும் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் 22 லட்சத்து 82 ஆயிரத்து 259 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் செலுத்தியவர்கள் 16 லட்சத்து 71 ஆயிரத்து 348 பேரும், 2-வது டோஸ் செலுத்தியவர்கள் 6 லட்சத்து 10 ஆயிரத்து 911 பேரும் அடங்குவர்.
இதில் ஆண்கள் 11 லட்சத்து 90 ஆயிரத்து 176 பேர். பெண்கள் 10 லட்சத்து 90 ஆயிரத்து 660 பேர். கோவிஷீல்டு செலுத்தியவர்கள் 20 லட்சத்து 71 ஆயிரத்து 722 பேரும், கோவேக்சின் செலுத்தியவர்கள் 2 லட்சத்து 7 ஆயிரத்து 234 பேர். மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3 லட்சத்து 10 ஆயிரத்து 874, 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 லட்சத்து 84 ஆயிரத்து 104, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 13 லட்சத்து 87 ஆயிரத்து 281 பேரும் அடங்குவர். இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.