விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை; சாலையில் மரம் சாய்ந்தது சிறுவந்தாடு-மடுகரை ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின்போது புளிய மரம் சாலையில் வேரோடு சாய்ந்தது. இதனால் சிறுவந்தாடு-மடுகரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-10-31 16:34 GMT
வளவனூர், 

வேரோடு சாய்ந்த புளியமரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர், நிலைகள் நிரம்பி வருகின்றன. விழுப்புரம் நகரில் நேற்று காலை முதல் மாலை 3 மணி வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 3.30 மணிக்குமேல் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழையானது சூறைகாற்றுடன் பெய்தது. அப்போது வளவனூர் அடுத்த சிறுவந்தாடு-மடுகரை செல்லும் சாலையோரம் இருந்த புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இளைஞர்கள் வெட்டி அகற்றினர்

இதுபற்றி தகவல் அறிந்த மோட்சகுளம் ஒன்றிய கவுன்சிலர் பாரத்,  மோட்சகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத் தலைவர் மணிகண்டன், சிறுவந்தாடு ஊராட்சி மன்ற தலைவர் வரதராஜன், துணை தலைவர் பிரகாஷ் மற்றும் அப்பகுதிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட  இளைஞர்கள் ஒன்று திரண்டு சுமார் 1 மணி நேரம் போராடி சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த புளியமரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். 
இதையடுத்து அங்கு போக்குவரத்து சீரானது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.

அணைக்கட்டு 

இதற்கிடையே மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணையாறு அணைக்கட்டு நிரம்பியது. இதையடுத்து அணைக்கட்டின் 7 ஷட்டர்கள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் அங்கிருந்து ஆழாங்கால் வாய்க்கால் வழியாக சீறிப்பாய்ந்து செல்கிறது.
மேலும் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள், அங்குள்ள அணைக்கட்டுக்கு சென்று மகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றனர். அதேநேரத்தில் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் சிறுவர்கள், இளைஞர்கள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்