வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து பள்ளி வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்தது.;
திண்டுக்கல்:
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. ஆனாலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைய தொடங்கியதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று படிக்க அனுமதிக்கப்பட்டனர். தடுப்பூசி செலுத்துதல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றியதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்தது. இதையடுத்து 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி நேற்று தீவிரமாக நடந்தது. பள்ளி கட்டிடங்களை சுத்தப்படுத்துவது, வகுப்பறைகளில் உள்ள மேஜைகள், இருக்கைகளை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் அனைத்து வகுப்பறைகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அத்துடன் ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்கள் கைகளை சுத்தம் செய்வதற்காக கிருமிநாசினி வைக்கப்பட்டது. அதேபோல் அவர்கள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் வகுப்பறைகளில் உள்ள இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டன.