தூத்துக்குடியில் தொழிலாளி கழுத்தை நெரித்துக்கொலை? மனைவியிடம் போலீசார் விசாரணை

தொழிலாளி கழுத்தை நெரித்துக்கொலை?

Update: 2021-10-31 15:59 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கூலித்தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டாரா? என்று அவருடைய மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கூலித்தொழிலாளி
தூத்துக்குடி தாளமுத்துநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுப்புலட்சுமி (38). இவர் உப்பு பண்டல் கட்டும் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ஆறுமுகத்துக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் மது குடித்து விட்டு அடிக்கடி வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
தகராறு
நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆறுமுகம் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து உள்ளார். அங்கு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து ஆறுமுகம் சத்தம் போட்டுக்கொண்டே இருந்தாராம். இதில் ஆத்திரம் அடைந்த சுப்புலட்சுமி, அருகில் கிடந்த துண்டால் ஆறுமுகத்தின் கழுத்தை இறுக்கினாராம். அதன்பிறகு ஆறுமுகம் சத்தம் போடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆறுமுகம் தூங்கி விட்டதாக கருதி சுப்புலட்சுமி படுத்து தூங்கி விட்டார்.
நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் ஆறுமுகம் எழுந்திருக்கவில்லை. இதனால் சுப்புலட்சுமி ஆறுமுகத்தை எழுப்பியபோது, அவர் இறந்து கிடப்பது தெரியவந்தது.
கொலையா?
இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்புலட்சுமி தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தாளமுத்துநகர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகே சுப்புலட்சுமி துண்டால் இறுக்கியதால் ஆறுமுகம் இறந்தாரா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார், சுப்புலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்