கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
விடுமுறை தினத்தையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர்.
கொடைக்கானல்:
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் வார விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. அதற்கேற்ப கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு முதல் சாரல் மழை பெய்து வந்தது. நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகல் நேரத்தில் அவ்வப்போது சாரல் மழையுடன் கடும் குளிர் நிலவியது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் செண்பகனூர் பகுதியில் வெண்ணிற மேகக்கூட்டங்கள் மலைகளில் தவழ்ந்து சென்றது.
இதை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், பில்லர் ராக், குணா குகை, பிரையண்ட் ்பூங்கா, ரோஜா பூங்கா, பாம்பார் அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.