தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி

பழனியில், வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்கள் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Update: 2021-10-31 15:49 GMT
பழனி:

பழனியில் உள்ள பழனியாண்டவர் கலைக்கல்லூரியில், வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி கல்லூரியில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் பிரபாகர் (பொறுப்பு) தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர்கள் பழனிசாமி, மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வல்லபாய் படேல் நாட்டுக்கு செய்த பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் மாணவர்கள், பேராசிரியர்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்ட காமராஜர், சிவாஜி தேசிய பேரவை சார்பில் வல்லபாய் படேல் பிறந்தநாள் விழா திண்டுக்கல்லில் கொண்டாடப்பட்டது. அதேபோல் இந்திராகாந்தி, ம.பொ.சி. ஆகியோரின் நினைவு தினமும் அனுசரிக்கப்பட்டது. இதற்கு பேரவை மாநகர் தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நவரத்தினம் முன்னிலை வகித்தார். பா.ஜ.க. துணை தலைவர் காளிதாஸ் அனைவரையும் வரவேற்றார். பேரவையின் அரசியல் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். விழாவில் வல்லபாய் படேல், இந்திராகாந்தி, ம.பொ.சி. ஆகியோரின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரவை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்