சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம்: ஓட்டலை சூறையாடி, மேலாளரை தாக்கிய 2 பேர் கைது-மேலும் 2 பேருக்கு வலைவீச்சு

சூளகிரியில் சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் ஓட்டலை சூறையாடியதுடன், மேலாளரையும் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-31 15:49 GMT
சூளகிரி:
பிரபல ஓட்டல்
தமிழ்நாட்டில் பல்வேறு முன்னணி நகரங்களில் பிரபல ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இதன் கிளை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ளது. இந்த ஓட்டலின் மேலாளராக சூளகிரி அருகே உள்ள மருதாண்டப்பள்ளியை சேர்ந்த ஹரீஷ் (வயது 22) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று அவர் ஓட்டலில் பணியில் இருந்தார். அப்போது ஓசூர் ஜனப்பர் தெருவை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் கணேஷ் (26), ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அர்ஜூன் (27), கார்த்திக், மணி ஆகிய 4 பேரும் ஓட்டலுக்கு வந்தனர்.
தாக்குதல்-சூறை
அவர்கள் தங்களுக்கு வேண்டிய உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். பிறகு சாப்பிட்ட உணவுக்கான பில்லை சர்வர், அவர்களிடம் கொடுத்து, பணம் கேட்டார். அந்த தொகையை கொடுக்க மறுத்த கணேஷ் உள்பட 4 பேரும் ஓட்டல் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர்.
மேலும் ஆத்திரத்தில் ஓட்டல் மேலாளர் ஹரீசை கையாலும், கட்டையாலும் தாக்கினார்கள். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர், ஸ்வைப்பிங் மெஷின், செல்போன் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தி, ஓட்டலை சூறையாடி விட்டு அங்கிருந்து சென்றனர்.
2 பேர் கைது
தாக்குதலில் காயம் அடைந்த ஹரீஷ் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷ், அர்ஜூன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கார்த்திக், மணி ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே கணேஷ் உள்பட 4 பேரும் ஓட்டலில் புகுந்து தகராறு செய்தது, ஓட்டல் பொருட்களை உடைத்து சூறையாடிய கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்