தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
சாலையில் குளம் போல் தேங்கும் கழிவுநீர்
பழனியை அடுத்த காவலப்பட்டி வடக்கு தெருவில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் கடந்த பல மாதங்களாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிப்படுகின்றனர். மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாமி அய்யப்பன், காவலப்பட்டி.
சேதமடையும் மேல்நிலை குடிநீர் தொட்டி
பெரியகுளம் தாலுகா பொம்மிநாயக்கன்பட்டியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் சேதமடைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் மேல்நிலை குடிநீர் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஸ்வநாதன், பொம்மிநாயக்கன்பட்டி.
மண் பாதையால் அவதி
பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி 14-வது வார்டு தெற்கு தெருவில் தார்சாலை அமைக்கப்படவில்லை. மண்பாதையாகவே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சகதிகாடாக பாதை மாறிவிடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சக்தீஸ், தேவதானப்பட்டி.
சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்
எரியோடு பேரூராட்சி பண்ணைப்பட்டியில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாறன், எரியோடு.
பள்ளி அருகே கொட்டப்படும் குப்பைகள்
வேடசந்தூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சாலையோரத்தில் குப்பைகளை சிலர் கொட்டிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ்கவுதமன், வேடசந்தூர்.
தார்சாலை அமைக்கப்படுமா?
திண்டுக்கல் பொன்னிமாந்துறை குட்டியப்பட்டி வடக்கு தெருவில் தார்சாலை அமைக்கப்படவில்லை. மண்பாதையாகவே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் பாதை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வெண்ணிலா, குட்டியப்பட்டி.