ஓட்டப்பிடாரம் அருகே காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்
ஓட்டப்பிடாரம் அருகே காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.
பட்டாசு வாங்கி கொண்டு...
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி ராஜீவ் நகர் சேர்ந்த மகாராஜன் மகன் வன்னியராஜ் (வயது 48). இவருடைய உறவினர் இசக்கிராஜா (40). இருவரும் நேற்று மாலையில் மோட்டார் சைக்கிளில் சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு அங்கு உள்ள கடையில் பட்டாசு வாங்கிக் கொண்டு மதுரை -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கார் மோதியது
ஓட்டப்பிடாரம் அருகே சந்திரகிரி விலக்கு வந்துகொண்டிருந்தபோது கன மழை பெய்தது. இதனால் இருவரும் மழைக்காக ரோட்டின் எதிர்ப்புறம் உள்ள கடையில் ஒதுங்குவதற்க்காக மோட்டார் சைக்கிளில் திடீரென்று வலது புறமாக திருப்பி உள்ளனர்.
அப்போது கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டு இருந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பின்னால் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டன. இதில் வன்னியராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த இசக்கிராஜாக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மேலும் 2 பேர் காயம்
காரை ஓட்டி வந்த புதுக்கோட்டை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் அஜித்குமார் (24) லேசான காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இருவரையும் ஓட்டப்பிடாரம் போலீசார் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இறந்த வன்னியராஜ் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.