சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதியது
கோத்தகிரி அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதியது. டிரைவரை கைது செய்யக்கோரி போலீசாரிடம் உறவினர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது கார் மோதியது. டிரைவரை கைது செய்யக்கோரி போலீசாரிடம் உறவினர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கார் மோதியது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கன்னிகாதேவி காலனியை சேர்ந்தவர் முருகையா. இவருடைய மனைவி செல்வமலர்(வயது 46). இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கன்னிகாதேவி காலனியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து தனது வீட்டுக்கு செல்ல சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் திடீரென அவர் மீது மோதியது. இதில் லேசான காயங்களுடன் செல்வமலர் உயிர் தப்பினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வாக்குவாதம்
இதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் திரண்டனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி கார் டிரைவரை கைது செய்ய வேண்டும்,
அவர் குடிபோதையில் கரை ஓட்டினாரா என விசாரிக்க வேண்டும், செல்வமலருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து அதற்கான செலவை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது திடீரென போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டிரைவர் மீது வழக்கு
பின்னர் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய தேகிலி கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் மோகன்ராஜ்(32) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் குடிபோதையில் காரை ஓட்டினாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயம் அடைந்த செல்வமலர், தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.