மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி ஊராட்சியில் சேதம் அடைந்த வீடுகளை அதிகாரிகள் ஆய்வு

மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி ஊராட்சி சாலைகள் மற்றும் மேற்கூரைகள் இல்லாத வீடுகளுக்கான சீரமைப்பு பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்தார்.

Update: 2021-10-31 08:17 GMT
மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி ஊராட்சி உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது வீடுகள் இடிந்து சேதம் அடைந்த நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களுக்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டி தரப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுனாமி குடியிருப்பு வீடுகள் சேதம் அடைந்து புயலால் மேற்கூரைகள் அடித்து செல்லப்பட்டது. 

ஊராட்சி மன்ற தலைவராக சேதுராமன் தேர்வு செய்யப்பட்ட நிலையில் வீட்டின் மேற்கூரை சேதமடைந்ததை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வீட்டுக்கும் தார்ப்பாய் வாங்கி கொடுத்தார். இதுகுறித்து பல்வேறு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகரிடம் ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன் சேதமடைந்த சாலைகள் மற்றும் வீடுகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார். 

இதுகுறித்து அவர் திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளருக்கு பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராஜவேலு, மீஞ்சூர் ஒன்றிய பொறியாளர் செந்தில், பணி மேற்பார்வையாளர் சதீஷ், சதாசிவம் ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர். சேதம் அடைந்த ஊராட்சி சாலைகள் மற்றும் மேற்கூரைகள் இல்லாத வீடுகளுக்கான சீரமைப்பு பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன், துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்