செம்பரம்பாக்கம் ஏரியில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தீவிரம்
செம்பரம்பாக்கம் ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.;
ஆகாயத்தாமரைகள்
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது செம்பரம்பாக்கம் ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் உள்ளதாகவும், நீர் வரத்து மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்கள் முழுவதுமாக தூர்வாரி பராமரிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
அதன்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியில் நீரில் பரந்து கிடக்கும் ஆகாயத்தாமரை மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்களில் உள்ள செடிகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மிதவை படகில் பொக்லைன் எந்திரம்
செம்பரம்பாக்கம் ஏரியின் மதகு அருகே தேங்கியுள்ள ஆகாயத்தாமரை செடிகள், மிதவை படகு மூலம் பொக்லைன் எந்திரங்கள் கொண்டு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. திருமுடிவாக்கம் மற்றும் வழுதலம்பேடு ஆகிய பகுதிகளில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் மழைநீர் கால்வாய்களிலும் உள்ள செடி, கொடிகளை அகற்றும் பணியில் 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த முறை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போது ஏரியில் ஐந்து கண் மதகுகளில் உள்ள ஷட்டர்களில் செடிகள் அதிகளவில் சிக்கி அதனை வெளியேற்றுவது கடும் சிரமமாக இருந்து வந்தது. எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும், முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரிலும் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றும் பணி நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.