வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ளச்சேத விவரங்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ளச்சேத விவரங்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-31 05:29 GMT
சிறப்பு கண்காணிப்பு குழுக்கள்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2021 எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அதற்காக சிறப்பு கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த குழுக்களின் மூலமாக மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ள மழைநீர் தேங்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் பழுதடைந்த கட்டிடங்களில் தங்கியிருப்பவர்கள் கண்டறியப்பட்டு அருகில் உள்ள பாதுகாப்பான மையங்களில் தங்க வைத்திட ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மையங்கள்

மழை வெள்ளக்காலங்களில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைத்திட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அவசர காலங்களில் பொதுமக்கள் தங்குவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நிவாரண மையங்களில் உறுதித்தன்மை குறித்தும், குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என உறுதி செய்திடவும், கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர்நிலை கரைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், மழைக்காலங்களில் ஆறுகள், குளங்களில் உபரி நீர் தடையின்றி செல்ல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மழை வெள்ளக்காலங்களில் மக்கள் தங்க வைக்கும் பாதுகாப்பு மையங்களில் கொரோனா நோய்த்தொற்று காரணத்தால், சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால், கூடுதல் பாதுகாப்பு மையங்கள் நிவாரண மையங்கள் அமைத்திட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மணல் மூட்டைகள்

நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் போன்றவற்றில் மழைவெள்ளத்தை எதிர்கொள்ள தேவையான பொக்லைன், மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் வேளாண்மை பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைவதை தவிர்க்க தண்ணீர் தடையின்றி செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கனமழையின் போது ஏற்படும் சேதங்களை பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு 9444272345 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்